திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் |
ஆறாம் திருமுறை |
6.10 திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் |
நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்
நூல்பூண்டார் நூல்மேலோ ராமை பூண்டார்
பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப்
பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்
அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்
பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
|
1 |
காடலாற் கருதாதார் கடல்நஞ்சுண்டார்
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்
உறுபிணியுஞ் செறுபகையு மொன்றைக் கண்ணாற்
பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்
பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
|
2 |
பூதப் படையுடையார் பொங்கு நூலார்
புலித்தோ லுடையினார் போரேற் றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார்
விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி
ஓதத் தொலிகடல்வாய் நஞ் முண்டார்
உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
|
3 |
நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
ஒலிகடல் வாய்நஞசம் மிடற்றி லேற்றார்
வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
|
4 |
தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலாய் அடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
|
5 |
கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
கானப்பேர் காதலார் காதல் செய்து
மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
மானுரிதோள் மிசைத்தோளார் மங்கை காண
நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
|
6 |
முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
கற்றார் பரவுங் கழலார் திங்கள்
கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
பான்மையா லூழி உலக மானார்
பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
|
7 |
கண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார்
கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப்
பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்
மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்
பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
|
8 |
ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீல முண்டார்
நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
அனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
|
9 |
கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலையின் மேலி ருந்து
வாளரக்கர் கோன்றலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.
|
10 |
திருச்சிற்றம்பலம் |